‘ஏஐ’யை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணினி வைரஸ் ;ஜப்பானிய இளைஞர் கைது
இணையத்தில், படைப்பாற்றல் திறனுடைய செயற்கை நுண்ணறிவு (AI) முறைகளைக் கொண்டு கணினிக் வைரஸை உருவாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது ஜப்பானிய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வேலையில்லாத அந்த 25 வயது இளைஞர் ஜப்பானின் கவாசாக்கி நகரைச் சேர்ந்தவர் ஆவார். படைப்பாற்றல் திறனுடைய செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கணினி வைரஸை உருவக்குவது தொடர்பான விவகாரம் ஜப்பானில் எழுவது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது.
அந்நாட்டின் மாநகர காவல்துறைப் பிரிவு (MPD) திங்கட்கிழமையன்று (மே 27) சந்தேக நபரான ரியுக்கி ஹயாஷி என்பவரைக் கைது செய்தது. அவர் தனது சொந்த கணினியையும் தொலைபேசியையும் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தியதாசச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் அவ்வாறு செய்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
ஹயாஷி உருவாக்கிய கணினி வைரஸ், இலக்கு கணினிகளில் தரவை குறியாக்கம் செய்வது மற்றும் கிரிப்டோகரன்சியை மீட்கும் தொகையாக கோருவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றலைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் வைரஸால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியது.