ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் ஊடக மேலாளர் கோபிநாத் சிவராஜாவிற்கு விளக்கமறியல்
வெளிநாட்டு பயணத்தடையை மீறி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரகசியமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் ஊடக முகாமையாளர் கோபிநாத் சிவராஜாவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலன கமகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரகசியமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விளையாட்டு நடவடிக்கைகளுக்காக சீன நிறுவனத்திடம் பணம் பெற்று ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படும் கோபிநாத் சிவராஜா, டான்ஸ் ஸ்போர்ட் ஸ்ரீலங்கா என்ற விளையாட்டு சங்கத்தின் செயலாளராகக் காட்டிக் கொண்டு விளையாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என பொலிசார் உண்மைகளை முன்வைத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரியுள்ளனர்.
அந்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.