இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் மாணவி
இரத்தினபுரியில் பாடசாலை மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட பலாவெல பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட ரம்புக்கந்த தோட்டத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ்மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் கணேசன் ருச்ஷானி (வயது 15) என்ற மாணவியே, இம்முறை எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தனது வீட்டில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால், தான் வழமையாக இரவில் சென்று தங்கும், அருகில் உள்ள தனது தந்தையின் தங்கையினது வீட்டுக்கு சென்று மாணவி உறங்கியுள்ளார்.
இந்நிலையில், மறுநாள் அதிகாலை மாணவி, தன் பக்கத்தில் நித்திரை கொண்டிருந்த அத்தையை எழுப்பி, தண்ணீர் கேட்டு, அருந்திவிட்டு, மீண்டும் தூங்கியிருக்கிறார். அதன் பின்னர், அதிகாலை 5 மணியளவில் அத்தையும் வீட்டாரும் நித்திரை விட்டெழுந்து மாணவியை பார்த்தபோது, அவர் வெறுந்தரையில் கிடந்துள்ளார்.
அதனையடுத்து, உடனடியாக மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு அத்தை வீட்டார் அறிவித்துள்ளனர். அதன் பின்னர், மாணவியை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், மாணவியின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான விசேட வைத்திய நிபுணர் விடுமுறையில் இருப்பதனால் இதுவரை பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் அதனால் மாணவியின் உடல் உறவினர்களிடம் இன்னும் கையளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள பாலமொன்றுக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த 24 வயதான இளம் பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.
அப்பிரதேசத்தில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்புகள் இடம்பெறுவதால், இச்சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.