நியூ கலிடோனியாவிற்கு விமானங்களை அனுப்பும் அவுஸ்ரேலியா!
நியூ கலிடோனியாவில் இருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்ற விமானங்களை அனுப்புவதாக ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.
பிரெஞ்சு பசிபிக் தீவுக்கூட்டத்தில் பழங்குடி மக்கள் நீண்ட காலமாக சுதந்திரம் கோரி வந்த நிலையில் கலவரம் வெடித்துள்ளது. இது வன்முறையாக உருமாறி உயிர் மற்றும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலைியல் அந்த பகுதியில் வசிக்கும் தங்கள் நாட்டு பிரஜைகளை வெளிகொணர ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இதன்படி அங்கிருந்து குடிமக்கள் மற்றும் பிற சுற்றுலாப் பயணிகளை வெளியேற்ற இரண்டு விமானங்களுக்கு ஆஸ்திரேலியா அனுமதி பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் நியூசிலாந்தும் தங்கள் நாட்டு பிரஜைகளை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளது.
பாரிஸில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தேர்தல் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து கடந்த வாரம் வன்முறை வெடித்ததில் நியூ கலிடோனியாவில் குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.