கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை! இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்து நேற்று விமான நிலையத்தில் அமைதியின்மை பதிவாகியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்குவதை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்வது தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பதால், இந்தியாவைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் தேவையற்றது என்று கூறியுள்ளார்.
“கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA), இந்திய நிறுவனங்கள் விசா வழங்குவதைப் பற்றி சமூக ஊடகங்கள் உட்பட அறிக்கைகள் மற்றும் கருத்துகளை நாங்கள் பார்த்தோம்.
இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டவை அல்லது இந்திய நிறுவனங்களைச் சார்ந்தவை அல்ல, அவை வேறு இடங்களில் தலைமையிடமாக உள்ளன,” என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.