இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி…வயிற்றிலிருந்து குழந்தையை உயிருடன் மீட்டெடுத்த வைத்தியர்கள்!
பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.இந்த நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.
குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.
குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பினாள் என்று அவரது உறவினர் ரமி அல்-ஷேக் தெரிவித்தார்.