கனடாவில் 6 இலங்கையர் கொலை ; குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியில் உயிரிழந்த நிலையில், தாய், நான்கு குழந்தைகள் மற்றும் அந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. .
சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
35 வயதான தர்ஷினி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 7 வயதான குழந்தை இனுக்கா விக்ரமசிங்க, 4 வயதான அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரியானா விக்ரமசிங்க மற்றும் 2 மாத குழந்தை கேலி விக்ரமசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த 40 வயதான காமினி அமரகோன் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.