வியட்நாமில் நபரின் வயிற்றுக்குள் உயிருடன் விலாங்கு மீன் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்
வியட்நாமில் நபர் ஒருவரின் அடிவயிற்றில் இருந்து 30 சென்டிமீட்டர் நீளமுள்ள விலாங்கு மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றியுள்ளனர்.
நோயாளி வயிற்றில் இருந்து அகற்றிய விலாங்கு மீன் உயிருடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு குவாங் நின் மாகாணத்தை சேர்ந்த 34 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில், நோயாளி வயிற்றில் வித்தியாசமான பொருள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதை அகற்ற மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள உயிருள்ள விலாங்கு, நோயாளியின் வயிற்றுக்குள் சுழன்று கொண்டிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் வியப்படைந்தனர்.
விலாங்கு அவரது மலக்குடல் வழியாக நுழைந்து பெருங்குடல் வரை பயணித்ததாக நம்பப்படுகிறது, தொடர்ந்து விலாங்கு மற்றும் சேதமடைந்த திசுக்களை மருத்துவர்கள் கவனமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக நடந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் நோயாளி தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நன்கு குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விலாங்கு மீன் நோயாளி வயிற்றுக்குள் உயிருடன் சென்றது தொடர்பான காரணம் உள்ளிட்ட இன்னபிற விபரங்கள் தெரியவில்லை.