பாக். குவாடர் துறைமுக ஆணைய வளாகம் மீது தாக்குதல்: 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள் பணிபுரியும் வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துறைமுகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பல இடங்களில் பதுங்கி கொண்டனர்.
தகவல் அறிந்ததும் ராணுவத்தினர் துறைமுகத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கூறும்போது, குவாடர் துறைமுக ஆணைய வளாகத்தில் 8 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. இந்த இயக்கம், பலுசிஸ்தானில் சீனாவின் முதலீடுகளை எதிர்த்து வருகிறது.
வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக குற்றம்சாட்டி வருகிறது. அந்த இயக்கத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி ்உள்ளனர்.