இலங்கையில் அதானியின் காற்றாலை மின் திட்டத்தால் சர்ச்சை நிலை!
இலங்கையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் காற்றாலை மின் திட்டம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கரையோரப் பகுதி மற்றும் வாழ்வாதாரங்களில் அதன் சாத்தியமான தாக்கம் குறித்து உள்ளூர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையை எழுப்பினர்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில், இலங்கையின் முதலீட்டுச் சபையானது, நாட்டின் வடக்கு மாகாணத்தில் இரண்டு காற்றாலை ஆற்றல் நிறைந்த தளங்களில் நிறுவனத்தின் 442 மில்லியன் டொலர் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை சந்தித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்துக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக அதானி கிரீன் எனர்ஜியின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் மன்னாரில் 250 மெகாவாட் மின்சாரமும், பூநகரியில் 234 மெகாவாட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.