புதுச்சேரி சிறுமி படுகொலை: கைதான இருருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான விவேகானந்தன், கருணாஸ் இருவரையும் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விவேகானந்தன், கருணாஸ் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியபோது சிறுமி உயிரிழந்ததால், சடலத்தை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த 7ம் திகதி புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வழக்கில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் கைதான இருவரின் வாக்குமூலங்கள் அடங்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் கடந்த 11ம் திகதி பொலிஸார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை பொலிஸார் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில், 7 நாள் நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் கருணாஸ், விவேகானந்தன் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரின் நீதிமன்ற காவலை 15 நாள்கள் நீட்டித்து நீதிபதி சோபனா தேவி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.