எச்சரிக்கையையும் மீறி ரபா மீது படையெடுப்பதில் நெதன்யாகு உறுதி…
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
போரின் தொடர்ச்சியாக, காசாவில் 5 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் அல்லது 4-ல் ஒருவர் என்ற கணக்கில் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர் என ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், காசா நகர மக்களின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொலிடிகோ என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, நாங்கள் ரபா நகருக்கு செல்வோம். போரில் இருந்து நாங்கள் விலக போவதில்லை. எனக்கென ஒரு சிவப்பு கோடு உள்ளது, அது என்னவென்பதும் உங்களுக்கு தெரியும். அது அக்டோபர் 7-ல் நடந்தது மீண்டும் நடக்காமல்,ஒருபோதும் நடக்காமல் இருப்பதற்கான விசயம் ஆகும் என்று கூறினார்.
இஸ்ரேலில் 1,160 பேரை கொன்று குவித்த கொடிய செயலே, தன்னுடைய உறுதியான முடிவின் நியாயத்திற்கான முக்கிய பொருளாகும் என நெதன்யாகு கூறுகிறார். இதனால் போர் தீவிரப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தி உள்ளார். டர்ந்து அவர் அரபு நாடுகளின் பெயர்களை குறிப்பிடாமல், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எண்ணற்ற தலைவர்களின் ஆதரவு உள்ளது என கூறினார். அவர்கள் விசயங்களை புரிந்து கொண்டனர். அமைதியாக அதற்கு ஒப்புதலும் அளித்து விட்டனர். ஈரானின் பயங்கரவாத மையத்தின் ஒரு பகுதியே ஹமாஸ் அமைப்பு என அவர்களுக்கு புரிந்திருக்கிறது என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்து வரும் கடுமையான போர் சூழலிடையே, அமெரிக்க அதிபர் பைடன் அளித்த பேட்டியின்போது, உயிரிழப்புகளை குறைக்க தவறிய நெதன்யாகு, இஸ்ரேலுக்கு உதவுவதற்கு பதிலாக கூடுதலாக வலியை ஏற்படுத்தி வருகிறார். என்னுடைய பார்வையில் இதனை கூறுகிறேன். இது இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு முரணானது. அது ஒரு பெரிய தவறு என்றே நான் நினைக்கிறேன் என்று சர்வதேச நிலைப்பாட்டின் மீது இஸ்ரேல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு தன்னுடைய கவலையை பைடன் வெளிப்படுத்தி உள்ளார்.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது என்னால் ஏற்று கொள்ள முடியாதது என்றும் பைடன் கூறினார். எனினும் போரானது நான்கில் 3 பங்கு நிறைவடைந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும். 6 அல்லது 4 வாரங்கள் அதற்கு எடுக்கும் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.