மத்தியப் பிரதேச தலைமைச் செயலகத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலகமான வல்லப பவனில் பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் தலைமைச் செயலகம், போபால் நகரில் உள்ளது. இங்கு அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தலைமை செயலகத்தில் சில ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் தீப்பிடித்து திடீரென புகை கிளம்பியுள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதற்குள் தீ 4வது தளத்திற்கும் மளமளவென பரவியது. தீ விபத்தால் பல அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு15 க்கும் மேற்பட்ட தீயணைப்புதுறை வாகனங்கள் விரைந்து வந்தன. இந்த வாகனங்களின் உதவியுடன் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமைச் செயலகத்தின் 3 மற்றும் 4வது தளத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீயை பீய்ச்சி அடித்து அணைக்க போராடி வருகின்றனர். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும், அரசுத்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மோகன் யாதவ் கூறுகையில், “கட்டடத்தின் பழைய வளாகத்தில் இருந்து தீ பரவியது. தீயை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற அரசு அலுவலகங்களில் தீ விபத்து சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.