ஹூதி தாக்குதலில் மூவர் உயிரிழப்பு: இலங்கையருக்கு நேர்ந்த கதி
ஹூதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யேமனின் ஏடன் துறைமுகத்தின் கடற்கரையிலிருந்து 50 கடல் மைல் தொலைவில் கிரேக்கத்திற்குச் சொந்தமான, பார்படாஸ் கொடியுடன் கூடிய ட்ரூ கான்ஃபிடன்ஸ் என்ற கப்பலை ஹூதிகள் தாக்கினர்.
தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இரண்டு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள், நேபாள பாதுகாப்பு அதிகாரி மற்றும் சுமார் இருபது பணியாளர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பணியாளர்கள் குழுவில், 15 பிலிப்பைன்ஸ் பிரஜைகள், 4 வியட்நாமியர்கள் மற்றும் ஒரு இந்தியர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு, கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.
தாக்குதலில் கப்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இருவரும் மற்றும் வியட்நாம்மை சேர்ந்த ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதல்களால் கப்பலில் காயமடைந்திருந்தவர்கள் உட்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.