தவணை முறையில் மின் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு!
மின் பாவனையாளர்கள் தமது புதிய இணைப்புகளுக்கான கொடுப்பனவுகளை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்காக பயனாளர்கள் புதிய மின் கட்டண இணைப்புக்கான மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும்.
எஞ்சிய கட்டணத்தை 10 அல்லது 12 மாதங்களில் செலுத்த முடியும்.
இதற்கு பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதுடன், உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான மின் துண்டிக்கப்பட்டு மீள் இணைப்பதற்கான அபராதத் தொகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய, 1,300 ரூபாயாக காணப்பட்ட குறித்த அபராத தொகையை 800 ரூபாயாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபை (CEB) தற்போது இந்த வசதியை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அதன் பணிப்பாளர் சபையும் இந்த முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாக விஜேசேகர மேலும் தெரிவித்தார்.