உலகின் பெரும் பணக்காரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்!
உலகின் பெரும் பணக்காரர் பட்டத்தை இழந்திருக்கும் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிடம் அதனை பறிகொடுத்திருக்கிறார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் அடிப்படையில் அமேசானின் ஜெஃப் பெசோஸ், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த இடத்திலிருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சுமார் 197.70 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் எலான் மஸ்க் பின்தங்க, 200.30 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஜெஃப் பெசோஸ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
ஜெஃப் பெசோஸின் அமேசான் மற்றும் எலான் மஸ்கின் டெஸ்லா என இருவரது பங்குகளும் அண்மைக்காலமாக எதிரெதிர் திசையில் போக்கு காட்டி வருகின்றன. இது இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பின் வித்தியாசத்தை அதிகரிக்கவும் செய்து வந்தது. இரண்டும் அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தூண்டும் முன்னணி பங்குகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளன. எனினும், அமேசான் பங்குகள் 2022 பிற்பகுதியில் தொடங்கி, இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளன. மாறாக எலான் மஸ்கின் டெஸ்லா அதன் 2021 உச்சத்திலிருந்து பெருமளவுக்கு கீழே சரிந்தது.
எலான் மஸ்கை பொறுத்தளவில் அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் ஷாங்காய் தொழிற்சாலைகள், அதன் ஏற்றுமதி அளவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சரிவை கண்டு வருகின்றன. இதன் போக்கு அதிகரித்ததில் நேற்றைய தினம் டெஸ்லா பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இது எலான் மஸ்க் சொத்துக்களின் நிகர மதிப்பை பாதிக்க, உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து எலான் மஸ்க் சரிய நேர்ந்திருக்கிறார்.
மாறாக, கொரோனா பெருந்தொற்று காலம் முதலே, அமேசானின் ஆன்லைன் விற்பனை ஏறுமுகம் கண்டிருக்கிறது. ஊரடங்கு மற்றும் வீடடங்கு காலம், வாடிக்கையாளர் மத்தியில் அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தை பரவலாக எடுத்துச் சென்றதில், ஜெஃப் பேசோஸ் தனக்கான புதிய சந்தையை தக்க வைத்துள்ளார். இதன் மூலம் 60 வயதாகும் பெசோஸ், 2021க்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்ததுள்ளார். உலகப் பணக்காரர்கள் என்னும் பரமபதத்தில் தற்போது சரிவு கண்டிருக்கும் 52 வயது எலான் மஸ்க், விரைவில் முதலிடத்துக்கு முன்னேறக் காத்திருக்கிறார்.