இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் முதன்முறையாக இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் குறிப்பாக வடக்கு, தெற்கு எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் வேலை செய்யும் இந்தியர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், +972-35226748 என்ற ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஹெல்ப்லைன் எண்ணாகும். அதேபோல், cons1.telaviv@mea.gov.in என்ற இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவரின் சகோதரருடன் பேசியதாகக் கூறியுள்ளார். “நான் அவருக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எதற்கும் எதற்கும் இஸ்ரேல் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று உறுதியளித்தேன்” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
ஏவுகணை தாக்குதலின் போது மூவரும் ஒரு பழத்தோட்டத்தை பயிரிட்டுக் கொண்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்வதாக இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.