நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு
நாளைய தினம் (04) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே போதுமான அளவு நீர் அருந்துவது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலகுவான ஆடைகளை அணிந்து, குளிர்மையான இடங்களில் இருப்பதும், சிறுவர்களுக்கும் இலகுவான ஆடைகளை அணிவித்து, அவர்களையும் குளிர்மையான இடத்தில் வைப்பதும் சிறந்தது. அத்துடன், சிறுவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்கள், நீர் என்பவற்றைப் பருக்கச் செய்வதோடு, சூடான உணவுகள், பானங்களை அவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்..
சிறுவர்களுக்கு தோல் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது ”வியர்வை கொப்புளங்கள், அரிக்கும் தோலழற்சி போன்றவை ஏற்படுகின்றன.
அவற்றை குறைக்க தண்ணீர் குடிக்க வைப்பதுடன் குழந்தைகளை தண்ணீரில் காலை மாலை 20 நிமிடம் தண்ணீரில் விளையாட விடுவது நல்லது.
உடலில் இருந்து வியர்வையுடன் உப்பு மற்றும் தண்ணீரும் வெளியேறுகிறது. இதனால், அனைவருக்கும் அசௌகரியம், வாந்தி, தலைவலி, உடல்வலி, தூக்கமின்மை, பசியின்மை, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இவற்றைத் தடுக்க, தண்ணீர் மற்றும் உப்பு அதிகம் குடிக்க வேண்டும். கஞ்சி வகைகள், தேசிக்காய், ஆரஞ்சு, நாரத்தை, தோடம்பழ சாறுகள், இளநீர், செவ்விளநீர், தேங்காய் நீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை எடுத்துக்கொள்வது நல்லது.”