இந்த ஆண்டு காத்திருக்கும் ஆபத்து – பூமிக்கு வரும் அதிக அளவு சூரியக் கதிர்வீச்சு
2023 ஆம் ஆண்டில் சூரியக் கதிர்வீச்சை பூமி உறிஞ்சிக் கொள்வதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாசா கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து வெளியான நாசாவின் அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகப்படியாக சூரியக் கதிர்வீச்சை பூமி உள்வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குண்டான தரவுகளை, CERES எனப்படும் நாசாவின் மேகங்கள் மற்றும் பூமியின் கதிரியக்க ஆற்றலைக் கண்டறியும் அமைப்பு, சேகரித்துக் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு சதுர மீட்டருக்கு, பூமி சூரியக் கதிர்வீச்சை உறிஞ்சும் தன்மை 3.9 Watts ஆக இருந்தது எனவும், மார்ச் மாதத்தில் உச்சபட்சமாக 6.2 W/m² அதிகரித்தது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கிடைத்த தரவுகள் அனைத்தையும் 2000ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, பூமி சூரியக்கதிர்வீச்சை உறிஞ்சும் தன்மை அதிகரித்துள்ளது தெரிய வந்தது.
இது கடந்த டிசம்பர் 2023 அதிகரித்துள்ளதாகவும், இதனால் பூமியின் ஆற்றல் சமநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணங்களாக கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு, வளிமண்டல துகள்கள், சூரியனின் மாறுபாடு போன்றவை சொல்லப்படுகின்றன. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காணப்பட்டதை விட இப்போது கணிசமாக அதிகரித்துள்ளதால், இனிவரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் பூமியில் அதிகரிக்கலாம்.
மேலும் இதனால் தாவரங்கள் அழிந்து போதல், கடல் மட்டம் உயர்வு, காலநிலை மாற்றங்கள் உலகளாவிய சூழலில் பல்வேறு விதமான மாறுதல்கள் உண்டாகி, பல பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனவே இந்த ஆண்டு சராசரி வெப்பத்தை விட கோடை காலத்தில் கூடுதல் வெப்பத்தை நாம் சந்திக்க நேரிடலாம்.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இப்போது பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.