அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடனுக்கு எதிராக திருமதி ஒபாமாவை நிறுத்த திட்டம்
																																		அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்குவதற்கு அக்கட்சியில் கணிசமானோர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் நேரடியாக மோதுவார்கள். கட்சியின் வேட்பாளர், உட்கட்சியினர் ஆதரவு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னேறி வருகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனே மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியினருமான கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகும் எதிர்பார்ப்பு பொய்த்தது. ஜோ பைடனுக்கு தற்போது 81 வயதாகிறது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்று பைடன் அடையாளம் காணப்படுகிறார். வயோதிகம் மட்டுமன்றி, ஞாபக மறதி காரணமாகவும் அவ்வப்போது பொதுவெளியில் உளறி வைக்கிறார். இந்த சூழலில் அவர் மீண்டும் அமெரிக்காவின் அதிபராவதும், அவர் 86 வயது வரை அதிபராக நீடிப்பதும் சொந்தக் கட்சியினரால் கூட ஏற்க முடியவில்லை.

உலகின் மிகப்பெரும் வல்லமை படைத்த, துடிப்பான தேசத்தின் அதிபர் வயோதிகம் மற்றும் மறதியால் அவதிப்படுவது சொந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எனவே ஜோ பைடனுக்கு பதிலாக முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவின் திருமதி மிஷெல் ஒபாமாவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்த விரும்புகின்றனர். அண்மையில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு ஒன்று, பைடனுக்கு பதில் மிஷெல் ஒபாமாவை ஜனநாயகக் கட்சியின் 48 சதவீதம் பேர் பரிந்துரை செய்துள்ளனர். இந்த வருடம் இறுதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பைடனுக்கு எதிரான குரல் பைய்ய அதிகரித்து வருகிறது.
Rasmussen Reports என்ற கருத்துக் கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சியினரில் 33 சதவீதத்தினர் பைடனுக்கு பதில் மாற்று வேட்பாளரை கட்சி பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். 45 சதவீதத்தினர் பைடனுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். 18 சதவீதம் பேர் அத்தகைய சூழ்நிலை ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். மாற்று வேட்பாளராக மிஷெல் ஒபாமாவை பரிந்துரை செய்பவர்கள், அதற்கு அடுத்த இடைத்திலேயே கமலா ஹாரிஸுக்கு இடம் தந்திருக்கிறார்கள். அதற்கடுத்த இடங்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மர் ஆகியோர் வருகின்றனர்.
        



                        
                            
