வேலைக்கு போகச்சொல்லி தாய் திட்டியதால் ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்த இளைஞர்!!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற பதாகையுடன் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் எதிரே ஒரு இளைஞர் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற பதாகையுடன், இன்று மதியம் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். மேலும் நுழைவாயில் அருகே உள்ள நான்குவழிச் சாலையில் அங்குமிங்கமாக ஓடினார். இதனை கண்ட அப்பகுதியில் போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தீயை அணைத்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
99 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபர், ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இது தொடர்பாக பொலிஸாஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தீக்குளித்த இளைஞரின் பெயர் புகாந் ரூபன் என்பது தெரியவந்தது. குரும்பூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரூபன் பத்தாம் வகுப்பு படித்துள்ளதாக கூறப்படுகிறது.
வேலை இல்லாமல் ரூபன் இருந்து வந்ததால், ரூபனின் தாயார் அவரை தொடர்ந்து திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரூபன் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே தீக்குளித்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலைய பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.