மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தளபதி உட்பட 9 பேர் பலி
மேற்குக் கரையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3), வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழுவின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.அத்தாக்குதலில் மேலும் நால்வர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனச் செய்தி நிறுவனமான ‘வாஃபா’ கூறியது.மற்ற நால்வரின் அடையாளம் தெளிவாகத் தெரியவில்லை என்று சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி அது கூறியது.
மேற்குக் கரையின் துல்கார்ம் நகரைச் சுற்றி ஆகாயத் தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
போராளிகளை ஏற்றிச்சென்ற வாகனம் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறிய ஹமாஸ் ஊடகம், அதில் பயணம் செய்த துல்கார்ம் படைப்பிரிவின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் தொடங்குவதற்கு முன்பே மேற்குக் கரையில் வன்செயல்கள் அதிகரித்து வந்தன. தற்போதும் அடிக்கடி அங்கு இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
புதன்கிழமை டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஒரு நாள் முன்னதாக பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா குழுவின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஹனியே படுகொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று சாடிய ஹமாசும் ஈரானும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சூளுரைத்தன. இஸ்ரேல் அச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்கவோ நிராகரிக்கவோ இல்லை.
ஹிஸ்புல்லா அமைப்பும் பதிலடி தரப்படும் என்று சூளுரைத்துள்ளது.