தாய்லாந்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி

தாய்லாந்தின் மத்தியப் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.மேலும் இருவருக்குக் காயம் என்று காவல்துறை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
பேங்காக்கிற்கு வடக்கில் உள்ள சுப்பான் புரி மாநிலத்தின் முவாங் மாவட்டத்தில் தொழிற்சாலை காலை 11 மணி அளவில் வெடித்தது.எரிந்துபோன கட்டடம் தரைமட்டமாகிய படங்களை மீட்புக் குழு ஒன்று பகிர்ந்தது.
ஒன்பது பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்துக் காவல்துறை கூறியது. முன்னதாக, அந்த எண்ணிக்கை நான்காக இருந்தது. மேலும் இருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
வெடிப்புக்கான காரணத்தை அடையாளங்காண நாங்கள் முயற்சி செய்துவருகிறோம், என்று உள்ளூர் காவல்துறைத் தலைவர் வான்சாய் கௌராம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தாய்லாந்தில் தொழிற்சாலை வெடிப்புகள் ஏற்படுவது வழக்கம். அங்குப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து மோசமாக உள்ளன.
சென்ற ஆண்டு, மற்றொரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில், குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர்