545 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம்…இன்பர்மேட்டிகா நிறுவனத்தின் செயலால் அதிர்ச்சி!
அமெரிக்காவில் நல்ல லாபத்துடன் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களின் 10 சதவீதம் பேரை திடீரென வேலையை விட்டு அனுப்பி உள்ளதால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானது முதல் இது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் என்ற குரல்கள் ஒலித்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்வு அதை உண்மையாக்கி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரெட்வுட் சிட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனம் இன்பர்மேட்டிகா. கிளவுட் டேட்டா மேனேஜ்மென்டில் இது முக்கியமான கம்பெனியாக பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான அமித் வாலியா.
இன்பர்மேட்டிகாவின் வர்த்தகம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி வளர்ச்சி கணித்ததை காட்டிலும் வருவாய் மற்றும் லாபம் அமோகமாக இருந்தது. இதனால் நிறுவனம் மொத்தமும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் அடுத்ததாக செய்த ஒரு காரியம் ஊழியர்களை வேதனையில் தள்ளியுள்ளது.சுமார் 545 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கான திட்டத்தை இன்பர்மேட்டிகா வகுத்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 10 சதவீதமாகும். இதில் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 90 பேரும் அடங்குவர்.
இன்பர்மேட்டிகா நிறுவனத்தின் வளர்ச்சியில் கணிசமாக பங்களித்த 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இரக்கமற்ற முடிவு குறித்து தலைமை செயல் அதிகாரி அமித் வாலியா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடினமான முடிவு என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதி நிலை உள்பட எல்லாம் சிறப்பாக இருக்கும் நிலையில், 10 சதவீத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.