527 இந்திய உணவு பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயன கலப்பு -EU வெளியிட்டுள்ள தகவல்
இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்படும் 527 உணவு வகைகளில் எத்திலீன் ஆக்சைடு எனப்படும் நச்சுக்கள் கலந்திருப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
உணவுப் பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்கள் குறித்த ஆய்வின் போது எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் அதிகளவில் உணவுப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இந்த நச்சுப்பொருள் காரணமாக மரபணு ரீதியான நோய்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து கடந்த 1991ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியனில் இந்த நச்சுப் பொருட்கள் உள்ள உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் எத்திலீன் ஆக்சைடு கலக்கப்பட்ட உணவு வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தற்போது ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து வந்த ஆயிரக்கணகான பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது, 527 இந்திய உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட எத்திலீன் ஆக்சைடு நச்சுப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
313 வகையான கொட்டைகள், பருப்புகள் மற்றும் விதைகளில் இந்த நச்சுப்பொருள் அதிகளவில் இருந்தது தெரியவந்துள்ளது. இயற்கை விவசாயம் மூலம் உருவாக்கப்பட்டதை குறிக்கும் வகையிலான ’ஆர்கானிக்’ என்று பெயர் சூட்டப்பட்ட 54 உணவுப் பொருட்களிலும் இந்த நச்சுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை இந்தியாவிற்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் 468 பொருட்களில் இந்த எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.