இந்தியா மீதான 50 சதவீத வரி – அமெரிக்க எம்.பி.க்கள் மூவர் எடுத்துள்ள தீர்மானம்
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அமெரிக்காவில் இந்திய பொருட்களில் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் 50 சதவீத வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் 3 எம்.பி.க்கள் தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோஸ், மெரிக் வெஸ்சே ஆகிய 3 எம்.பி.க்கள் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியா மீதான வரி விதிப்பு அமெரிக்க நுகர்வோர்களை பாதிப்பதாகவும், இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்துவதாகவும், வர்த்தகத்தில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




