கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 35 வது பட்டமளிப்பு விழா!
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வளாகத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அரங்கில் நடைபெற்றது.
பல்கலைகழக வேந்தர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், துணை வேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் அனைவரையும் வரவேற்று பல்கலைகழகத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுடில்லியில் உள்ள யு.ஜி.சி.தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,அண்மையில் இந்தியா அனுப்பிய அக்னி 5 ஏவுகனை சோதனையிலும், நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 ஆகிய திட்டங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருந்ததை சுட்டி காட்டினார்.
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இருப்பதாக கூறிய அவர்,இந்தியாவில் 20,000 தொழில் முனைவோர்கள் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். முன்பு உயர்கல்வியில் பெண்கள் குறைவாகவே கல்வி கற்றிருந்தனர்.
இன்றைக்கு 40 சதவீதம் பெண்கள் முனைவர் பட்டம் உள்ளிட்ட உயர்கல்வியினைத் தொடர்வதாக அவர் கூறினார்.
இந்தியா தற்போது பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை தொட போகிற நாடாக இருக்கிறது. இளைஞர்களை அதிகம் பெற்ற நாடாகவும், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவைத் தேடி வரும் நாடாகவும் உயர்ந்துள்ளது.
இன்றைக்கும் 60 சதவீதம் பேர் கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்து கல்வி கற்கிறார்கள். இது போன்ற பல்கலைக்கழகங்கள் மாணவியரின் தனித்திறன்களை வெளி கொணர்வதிலும் கல்வியளிப்பதிலும் பெரும் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
உயர்ந்த கல்வி மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என கூறிய அவர்,ஊரக பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் கல்வி பயில டிஜிட்டல் பங்களிப்பு முறை அதிக பயனளிக்கும் என குறிப்பிட்டார்.
தற்போது இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் மன அழுத்தத்தில் இருந்து வெளி வர தங்களது தனித்திறமைகளை அடையாளம் கண்டு வெற்றி பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் முதுகலையில்,723 மாணவிகளும்,முனைவர் பட்டங்களை 44 மாணவிகளும், இளங்கலையில் 1916 மாணவிகள் மற்றும் டிப்ளமோவில் 17 மாணவிகள் என மொத்தம் 2700 பேர் பட்டங்களை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பதிவாளர் முனைவர், கவுசல்யா, நிர்வாகக் குழு மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆசிரியர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.