எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழைமையான தங்க நகரம்!

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் 4 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரத்தில் டோலமிக் காலத்தைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள் உள்பட பல்வேறு வகையான அரிய பழங்காலக் கலைப்பொருள்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இப்பகுதியில் தங்கத்தை அரைக்கும் மற்றும் நொறுக்கும் நிலையங்கள், வடிகட்டும் படுகைகள், தங்கத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும் களிமண் உலைகள் முதலானவை கண்டறியப்பட்ட நிலையில், இந்த நகர் தங்கத் தொழில் கூடமாக இருந்தது தெரிய வருகிறது.
இங்கிருந்து கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளின் அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கை, நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த தகவல்களும் அறியப்படுகிறது.
எகிப்து பிரமிடுகளைப் போல, இந்தப் பகுதியும் சுற்றுலாத் தளமாக மாற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.