மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி, மேலும் பலர் மாயம்

மத்திய மற்றும் கிழக்கு மெக்சிகோ முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(10) தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் மிகப்பெரிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மத்திய மெக்சிகோவின் பியூப்லா மாநிலத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் வெராக்ரூஸில் இரண்டு பேர் மற்றும் குவெரெட்டாரோவில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை மீட்டெடுக்கவும், சாலைகளை மீண்டும் திறக்கவும், உதவி வழங்கவும் கூட்டாட்சி மற்றும் மாநில நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவின் 32 மாநிலங்களில் 31 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெப்பமண்டல புயல் ரேமண்ட் பசிபிக் கடற்கரையில் மழைப்பொழிவை தீவிரப்படுத்துவதாகவும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.