‘ஆம்பிபியஸ் மவுஸ்’ உட்பட அமேசான் காட்டில் 27 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ‘ஆம்பிபியஸ் மவுஸ்’உட்பட 27 புதிய உயிரினங்கள் தென்னமெரிக்க நாடான பெருவிலுள்ள அமேசான் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தின்போது அவை கண்டுபிடிக்கப்பட்டதாக ‘கன்சர்வேஷன் இன்டர்நேஷனல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
உடற்பகுதியின் மேற்பரப்பில் முட்களுடன் கூடிய சுண்டெலி, ஒருவகை அணில், எட்டு வகை மீன்கள், மூன்று இருவாழிட உயிரினங்கள், பத்து வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவையும் அந்த உயிரினங்களில் அடங்கும் என்று ‘கன்சர்வேஷன் இன்டர்நேஷனல்’ அமைப்பின் விரைவு மதிப்பீட்டுத் திட்டத்தின் தலைவர் டாக்டர் டிராண்ட் லார்சன் விளக்கினார்.
மேலும் 48 உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அவை புதியவையா என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது என்றும் டாக்டர் லார்சன் சொன்னார்.
பலதரப்பட்ட உயிர்ச்சூழல்கள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான அல்டோ மாயோ பகுதியில் அந்தப் புதுவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“பாலூட்டி மற்றும் முதுகெலும்புள்ளவற்றைச் சேர்ந்த பல புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளது உண்மையிலேயே நம்ப முடியாததாக உள்ளது. அதிலும் குறிப்பாக மனித நடமாட்டம் அதிகமுள்ள அல்டோ மாயோ பகுதியில் அவற்றைக் கண்டுபிடித்துள்ளது இன்னும் சிறப்பிற்குரியது,” என்றார் டாக்டர் லார்சன்.
கடந்த 2022 ஜூன், ஜூலை மாதங்களில் 13 அறிவியல் வல்லுநர்களும் உள்ளூர்த் தொழில்நுட்பர்களும் தொல்குடியினரின் துணையுடன் அந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர்.