ஹைதியில் சடலமாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர்..!
கரிபீயன் தீவில் அமைந்துள்ள ஹைதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 11.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஹைதி நாடானது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், துப்பாக்கி காட்டி கொள்ளையடித்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல், சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை போன்ற குற்றச் செயல் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. ஹைதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், தெற்கு ஹைதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (48km) தொலைவில் உள்ளது செகுயின். இங்குதான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரின் சடலங்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிகாரி ஒருவர், இறந்தவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் முடிந்த ஒரு நாளுக்கு பின்பே இறப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உள்ளூர்வாசிகள், விஷம் வைத்து கொல்லப்பட்டதன் காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.ஹைதியின் தென்கிழக்கு துறை உயரதிகாரி Jude Pierre Michel Lafontant, காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை இம்மாத தொடக்கத்தில் Global Initiative Against Transnational Organized Crime வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, குடியிருப்பாளர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து மிரட்டி பணம் பறித்ததன் காரணமாக ஹைதிய குற்றவியல் குழுக்கள் சக்திவாய்ந்த முறையில் பெருகியுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு மட்டும் இந்த குற்றவியல் கும்பலின் நடவடிக்கைகளால் 5000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது