இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் உயிரிழப்பு : ஈரான் அறிவிப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஈரான் அரசும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் அரசு ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஈரானில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் படைவீரர்கள் விவகாரங்களுக்கான அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி, ஈரானின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
ஆனாலும், வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு அளித்த விரிவான தகவலில், இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர். அவர்களில் 436 பேர் பொதுமக்கள். 435 பேர் பாதுகாப்பு படையினர். இதுதவிர, 4,475 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.