மாதச் சம்பளம் 6 இலட்சத்திற்கும் அதிகம் ; 25 முதல் 45 வயதுடையவர்களுக்கு அரிய வாய்ப்பு
இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வீட்டுத் தாதியர் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான தகுதிகளாக, 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் NVQ III தாதியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 11 மாத கால தாதியர் அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், ஆங்கில மொழியில் போதிய தேர்ச்சியும் அவசியமாகும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் விசா வழங்கப்படுவதுடன், மாதம் 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஊதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 107 நிபுணர்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்படுவதால், கடவுச்சீட்டு அல்லது பணத்தை வேறு எந்தவொரு தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களிடம் வழங்கி ஏமாற வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





