ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாடம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!
ஒவ்வொருவரின் வாழ்விலும் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்மில் பலர் அதை கவனிக்கத் தவறி விடுகிறோம். ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உணவு, உடற்பயிற்சியை மட்டும் சார்ந்திருப்பது அல்ல. உங்களது வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமாக வாழ அன்றாடம் இதை பின்பற்றினாலே உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா அல்லது மாடிப்படி ஏறி இறங்குதல் போன்ற உடல் உழைப்பை செய்வதன் மூலம் உங்களது உடலானது இதய நோய் பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுவது மட்டுமின்றி 2 சதவீத அளவிற்கு அந்த பாதிப்பை குறைக்கிறது. வேறு எதையும் செய்யாமல் அட்லீஸ்ட் தினமும் 15 நிமிடங்கள் நடை பயில்வது துரித மரணத்தை தள்ளிப்போடலாம் என்கிறார்கள் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
2021ம் ஆண்டு அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஆய்வு ஒன்றில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியமான ஈறுகளை கொண்டவர்கள் குறைந்த இரத்த அழுத்தத்தைக் கொண்டிருப்பதாக கண்டறிந்தனர். ஆரோக்கியமான இதயத்துக்கு வாய்வழி சுகாதாரம் முக்கியமானது. தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் 3 முதல் 4 நிமிடங்கள் பல் துலக்க நேரம் செலவிட ஆரோக்கியமான வாய் நலன் காக்கலாம் என்கிறார்கள். பல் துலக்கும்போது ஈறுகளையும் சேர்த்து பல் துலக்க வேண்டும் என்கிறார்கள்.
10 நிமிடங்கள் எந்தவொரு இடையூறுமின்றி தியானம் செய்தால் 10 நாளில் 16 சதவீதம் சந்தோஷமாக இருப்பதை உணர்வீர்கள். மேலும், உடல் நலனும், மன நலனும் அதிகரிக்கும் என்கிறார்கள். மனதானது ஏதாவது ஒன்றை நினைத்து அழுத்தத்திலே இருக்கும். அதுமட்டுமின்றி குடும்பம், நண்பர்கள், கணவன்-மனைவி சண்டை போன்று பல வகையான பிரச்னைகளுக்கு நடுவில்தான் அனைவரும் வாழ்கிறோம். மனதை ஒருநிலையாக வைத்திருக்க மற்றும் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற தியானம் செய்ய வேண்டும்.
எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் தொடர்ந்து 25 நிமிடங்கள் எந்தவிதமான இடையூறுமின்றி செய்யுங்கள். பின்னர் 5 நிமிடங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலை திறனை அதிகரிக்க உதவும் மற்றும் சலிப்பூட்டும் நிலையை தவிர்க்கும் என்பது சிடனி பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்த உண்மை.
உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள, உங்கள் மன அழுத்தத்தை குறைக்க தினமும் 20 நிமிடங்கள் உடலை முறுக்கேற்றும் ஸ்டிரிச் பயிற்சி செய்யுங்கள் என்கிறார்கள். நீண்ட நாள் வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். மிகவும் சிரமப்பட்டு செய்யும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. சாதாரண பயிற்சிகளே போதுமானது. மிகவும் வயதான ஜப்பானியர்கள் கூட ஐந்து நிமிடத்தில் செய்யும், ‘ரேடியோ டெய்சோ’ என்கிற உடற்பயிற்சியை தினமும் செய்கிறார்கள்.
காலை உணவானது குளுக்கோஸ் (Glucose) பெற உதவுகிறது. அந்த காலை உணவை தவிர்ப்பதால் பித்தப்பையில் கற்கள் உருவாகுவது முதல் சர்க்கரை நோய் வரை அனைத்தும் உண்டாகக்கூடும். அதனால் காலை உணவை ஒரு பொழுதும் தவிர்க்காமல் உட்கொள்வது அவசியம். அதுமட்டுமின்றி ஆரோக்கியமான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். நாளின் முதல் உணவை தாமதப்படுத்துவது ஒரு மணி நேர தாமதத்திற்கு இருதய நோய் அபாயத்தில் 6 சதவீதம் அதிகரிப்புடன் தொடர்புடையது. இரவு 9 மணிக்குப் பிறகு இரவு உணவை உண்பது பக்கவாதம் போன்ற பெருமூளை நோய் அபாயத்தில் 28 சதவீதம் அதிகரிப்புடன் தொடர்புடையது என்கிறார்கள்.
உடல் செயல்பாடு, கழிவுகள் வெளியேற, உடல் வெப்பத்தை சீராக்கி பல நோய்களிடமிருந்து உங்களை தடுக்க தண்ணீரானது உதவுகிறது. ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அமெரிக்க குடல் நலன் அமைப்பு வாரம் 30 வகையான தாவர உணவுகளை எடுத்துக்கொள்ள அது உங்கள் குடல் நுண்ணுயிர்களின் ஆரோக்கியம் காத்து உங்கள் மனநலன் மற்றும் உடல் நலன் காக்கும் என்கிறார்கள்.
வீட்டிற்குள்ளேயோ அல்லது அலுவலகத்திலேயோ முடங்கி கிடக்காதீர்கள். வாரத்தில் மூன்று முறை இயற்கை சார்ந்த இடங்களுக்கு, பசுமை நிறைந்த இடங்களுக்கு சென்று வாருங்கள். அது உங்கள் மன பதற்றத்தையும், மன அழுத்தத்தயும் குறைத்து மன நிம்மதிக்கு வழி வகுக்கும் என்கிறார்கள்.
தினசரி மதிய உணவிற்கு பின் 3 மணிக்கு பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் ஒரு குட்டி தூக்கம் போடுங்கள். அது உங்களை சுறுசுறுப்புடன் மாலை வரை வேலை பார்க்க உதவும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். குட்டித் தூக்கம் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் வலுவான நோயெதிர்ப்பு தன்மையை உடலுக்கு வழங்குகிறது.
நாள் முழுவதும் உழைத்த உடம்பிற்கு கட்டாயம் ஓய்வு தேவை என்பதால் குறைந்தது 7 முதல் 9 மணி நேர தடையற்ற தூக்கமானது அவசியமான ஒன்றாகும். இரவு 9.30 அல்லது 10 மணி அளவில் தூங்கி சூரியன் உதிப்பதற்கு முன் எழுவது அவசியம். உங்கள் மனம் எனும் மூளை செயல்பாட்டையும், உடலையும் மாற்றி அமைக்க உதவும் ஒரு பலமான ஆயுதம், ‘தூக்கம்’ என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள்