1.7 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
சுமார் 1.7 கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா தொகையை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற சாரதி ஒருவரை, இன்று (21) நண்பகல் நீர்கொழும்பு மதுவரி நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கேரளா கஞ்சா பொதிகள், சிறிய லொறி ஒன்றின் மூலம் குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே கைது இடம்பெற்றுள்ளது.
புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நீர்கொழும்பு மஹா ஹுனுபிட்டிய பகுதியில் வைத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுமார் 85 கிலோ கிராம் எடையுள்ள இந்தக் கேரளா கஞ்சா, 40 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பின்னர் அவை 2 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக மதுவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதுடன், அவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் தொகையை இன்றைய தினம் (21) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





