வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களம் : ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு!
விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தின்ர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழ்க்கில் காலம்காலமாக மக்களால் புனித இடங்களாக போற்றி பாதுகாக்கப்பட்ட இடங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்.
அதில், போருக்குப் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்புக்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வீரியமாக மேற்கொள்ளப்படுகிறது. இது இன நல்லிணக்கத்தை அடியோடு சிதைக்கும் நடவடிக்கையாகவே அமையும் என்பதை தாங்களும் உணருவீர்கள் என நம்புகிறேன்.
வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று என நீளும் இவ் ஆக்கிரமிப்புப் பட்டியல் தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை தனது ஆக்கிரமிப்பின் கால்களை ஆழப் பதித்துள்ளமை, இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களின் இயல்புவாழ்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
பௌத்தம் என்பது ஓர் மத அடையாளமே அன்றி சிங்கள இனத்துக்கான அடையாளம் அல்ல என்பதை அடியோடு மறுந்து தமிழினத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலையை நிகழ்த்துவதென்பது, இந்த நாட்டின் ஆட்சியாளரான தங்களின் தாராளவாதம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
ஆகவே தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, மக்களின் கோரிக்கையாக இதனை தங்களுக்கு முன்னளிப்புச் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.