புகலிடக் கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்கு போதைப்பொருள் அச்சுறுத்தல்.
பிரித்தானியாவில் தி டெலிகிராஃப் (The Telegraph) பத்திரிகை வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையின்படி, சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூலமாக, நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் சடுதியாக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவன அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிற்குள் வட பிரான்ஸிலிருந்து வரும் சில புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப்பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை பிரித்தானியாவில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களிடம் ஒப்படைப்பதற்கு இணங்கினால், அவர்களுக்கு இலவசமாகவோ அல்லது மிகவும் குறைந்த விலையிலோ எல்லைகளைக் கடக்கும் வசதியை ஆட்கடத்தல்காரர்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் கடத்தலுக்குச் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை, விசேடமாக வடிவமைக்கப்பட்ட முறையில் எல்லையை கடக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தங்களை ஒரு புகலிடக் கோரிக்கையாளர்களாக காட்டிக்கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் பயணிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டதும், கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் உடனடியாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல்களின் உறுப்பினர்களிடம் கைமாற்றப்படுவதாக ஆட்கடத்தல்காரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வானது, பிரித்தானியாவின் எல்லைகளைக் கடப்பதற்கு ஆட்கடத்தல்காரர்களும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும் எவ்வாறு இணைந்து சதி செய்கிறார்கள் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.





