சுகாதார அமைச்சர் குறிவைப்பு: பதவி விலகுமாறு எதிரணி வலியுறுத்து!
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
“தரமற்ற ஊசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்குரிய பொறுப்பை அமைச்சர் ஏற்கவேண்டும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தபோது தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியே அன்றும் கதைத்தது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்தே அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.
நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? தரமற்ற ஊசியால் இருவர் உயிரிழந்துள்ளனர். இது விடயம் தொடர்பில் அரசாங்க நிறுவனங்கள்மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இது ஏற்புடையது அல்ல.
அரசாங்கம் மற்றும் துறைசார் அமைச்சர் பொறுப்புகூறவேண்டும். சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும். அதுதான் தூய்மையான அரசியல் கலாசாரமாகும்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக உள்ள தகவல்கள் திரட்பட்பட்டுவருகின்றன. அதன் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய தரவுகளே தற்போது திரட்டப்பட்டுவருகின்றன.” – என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா.





