சட்டவிரோத புலம்பெயர்வாளர்களை நாடு கடத்துதல் தொடர்பில் பிரித்தானியாவைத் தொடர்ந்து மற்றொரு நாடு முன்னெடுத்துள்ள திட்டம்
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டுவருவதைப்போலவே, ஜேர்மனியும் திட்டமிடத்துவங்கியுள்ளது.
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மனி சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல், மற்றும் சட்ட விரோதமாக ஜேர்மனியில் வாழ்வோரை நாடுகடத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இன்னும் கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.என்றாலும், ரஷ்யப் போருக்குத் தப்பி ஓடிவரும் உக்ரைனியர்களுக்கு ஜேர்மனி தொடர்ந்து பாதுகாப்பளிக்கும் என்றும் கூறியுள்ளார் அவர்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஷோல்ஸ் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனியர்கள் ஜேர்மானியர்களால் வரவேற்கப்படும் அதே நேரத்தில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் வெறுப்பை எதிர்கொள்கிறார்கள். புகலிடக்கோரிக்கை மையங்கள் மீதான தாக்குதல்கள் கடந்த ஆண்டில் மீண்டும் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில்தான் ஷோல்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை ஜேர்மனி வேகப்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜேர்மனியில் வாழும் உரிமை இல்லாதவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு விரைவாகத் திரும்பவேண்டும் என்று கூறிய ஷோல்ஸ், அது இன்னமும் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றார்.அத்துடன் சட்டவிரோத புலம்பெயர்தலையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ள ஷோல்ஸ், சட்டவிரோத புலம்பெயர்தலைக் குறைக்க விரும்புகிறோம் என்றார்.
மக்கள் கடத்தல்காரர்கள் கையில் சிக்குவதையும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பயணிப்பதையும் குறைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஷோல்ஸ்.