காணாமல் போன விஸ்கி போத்தல்கள் – நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் அறையில் இருந்து 2 கோடி ரூபா பெறுமதியான 1194 விஸ்கி போத்தல்கள் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவிட்டுள்ளார். ,
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கயான் சம்பத் என்ற சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ், சந்தேகநபர் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியமை, அரசாங்க ஊழியர் என்ற நம்பிக்கையை மீறியமை, திருடப்பட்ட பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
நீதிமன்றினால் கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்களை கலால் திணைக்களம் பறிமுதல் செய்திருந்தது.
எஞ்சிய மதுபான போத்தல்களுக்கு என்ன செய்யப்பட்டது என்பதை ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.