உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது – மாவை சேனாதிராசா!
வெளிநாட்டு மீனவர்கள் எந்த எல்லையில் மீன் பிடிக்கலாம் என்பது சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பது தொடர்பாக கேட்டபோது இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
இலங்கை, இந்திய மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கென கடற்பரப்பில் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் நின்று யாரும் மீன்பிடி தொழிலை செய்ய முடியும்.
அதை விடுத்து, எல்லை மீறி வந்து தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறையில் தொழில் செய்வது என்பது இரு நாட்டு மீனவர்களையும் மோத விடுகின்ற செயற்பாடாகவே அமையும்.
ஒரு நாட்டின் மீனவர்களை இன்னொரு நாட்டின் எல்லைக்குள் தொழில் செய்ய அனுமதிப்பதாயின், மீனவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, கலந்தாலோசித்து, ஆராய்ந்து, அதன் பின்னரே இது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு எவ்வித கலந்துரையாடலையும் நடத்தாமல், எமது மீனவர்களது கடற்பரப்பு எல்லைக்குள் பிரவேசித்து, தொழில் செய்ய யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது. என அவர் கூறினார்.