இஸ்ரேலில் பிரித்தானிய சகோதரிகளுக்கு ஏற்பட்ட கோர முடிவு; வாகனம் மீது சரமாரி தாக்குதல்
இஸ்ரேலில் மேற்குக் கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரு சகோதரிகள் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில், அவர்கள் பிரித்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் மேற்குக் கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 மற்றும் 20 வயதுடைய இரு சகோதரிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இராணுவம் லெபனான் இலக்குகளை குண்டுவீசித் தாக்கிய நிலையிலேயே மேற்குக் கரை பகுதியில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜெருசலேமுக்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஹம்ரா குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை அவர்களின் கார் தாக்கப்பட்டதில் சிறுமிகளின் தாயும் பலத்த காயமடைந்தார் என கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் வெளியான புகைப்படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சம்பவயிடத்திலேயே சகோதரிகள் இருவரும் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகொப்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டார்.மேலும், கொல்லப்பட்ட சகோதரிகளின் தந்தை, தாக்குதலின் போது இன்னொரு வாகனத்தில் இவர்களை தொடர்ந்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய குடும்பத்தினரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், கடந்த 2005ல் இவர்கள் பிரித்தானியாவில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்ததாக மட்டும் தெரியவந்துள்ளது.
மேலும், பெத்லஹேம் நகருக்கு அருகில் அமைந்துள்ள சிறிய குடியேற்ற நகரமான எஃப்ராட்டில் இவர்கள் குடியேறியுள்ளனர். வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவினரும் பொறுப்பேற்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் ஹமாஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த தாக்குதலை குறிப்பிட்டு, மேற்குக்கரை மற்றும் அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் செய்த குற்றங்களுக்கு கிடைத்த பதிலடி என்று பாராட்டியுள்ளார்.