இந்தியாவில் ஐபோன் தயாரிக்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவிப்பு
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் அமையும் தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் மத்திய தகவல் இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதற்காக ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு பெங்களூர் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் உற்பத்தியை துவக்க, இந்த தொழிற்சாலையில் 700 மில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டத்தில் தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்பிள் உதிரிபாகங்களையும் தயாரிக்கவும், தனது மற்றுமொரு தயாரிப்பான மின்னணு வாகனங்களுக்கான உதிரி பாகங்களையும் இங்கு தயாரிக்க பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.