மகளிர் தினத்தன்று ஆட்டம் போட்ட யுவதிகள்; அச்சத்தில் ஈரானிய பெண்கள்!
ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமல் இப்பெண்கள் காணப்பட்டனர்.
தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள் ஐவர் நடனமாடியுள்ளனர். நைஜீரிய பாடகர் ரேமாவின் காம் டவ்ன் எனும் பாடலுக்கு இவர்கள் நடனமாடினர்.இவர்கள் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோ டெலிகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியாகின. சர்வதேச மகளிர் தினமான கடந்த 8ம் திகதி இந்த வீடியோ டிக்டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது.
ஈரானில் பெண்கள் பகிரங்கமாக நடனமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தலையை மறைக்கும் ஹஜாப் ஆடை அணியாமல் பொது இடங்களில் காணப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இப்பெண்களை அறிவீர்களா என, பிரதேசவாசிகளிடம் ஈரானிய அதிகாரிகள் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின.
இப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேற்படி நடன வீடியே தொடர்பில் கவலை தெரிவித்து வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் செயற்பாட்டாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.
மேற்படி வீடியோ வெளியான பின்னர் தலையை மறைக்கும் வகையில் ஆடையணிந்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. முதல் வீடியோ பதிவு செய்யப்பட்ட இடத்தில் இந்த வீடியோவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஆனால், 2 ஆவது வீடியோவையோ அது பதிவுசெய்யப்பட்ட சூழ்நிலையையோ உறுதிப்படுத்த முடியவில்லை என ஏஎவ்பி தெரிவித்துள்ளது. இதன்போது பெண்கள் விடுவிக்கப்பட்டனரா என்பது குறித்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.