இந்தியா: பாகிஸ்தானின்வான்வெளி அனுமதி குற்றச்சாட்டு அபத்தமானது
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு வான்வெளி அனுமதி வழங்குவதில் புதுடெல்லி தாமதம் செய்வதாகப் பாகிஸ்தான் விடுத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா “அபத்தமானது” (ridiculous) மற்றும் “தவறான தகவல்” (misinformation) என்று கண்டித்துள்ளது.
இந்தியா வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வான்வெளி அனுமதி கோரிக்கை டிசம்பர் 1 ஆம் தேதி பிற்பகல் 1:00 மணியளவில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் பெறப்பட்டது என்று கூறினார்.
பாகிஸ்தானால் சமர்ப்பிக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி, இந்திய அரசாங்கம் அந்தக் கோரிக்கையை “விரைவாக” (expeditiously) பரிசீலித்து, அதே நாள் மாலை 5:30 மணிக்கே அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, இந்திய நேரப்படி சரியாக அனுமதி வழங்கத் தவறியதால் விமானம் 60 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்தது.
மேலும், இந்தியா வழங்கிய வரையறுக்கப்பட்ட அனுமதி “செயல்பாட்டு ரீதியாகப் பொருத்தமற்றது” (operationally impractical) என்றும் இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியது.
இந்தப் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா மொத்தமாக நிராகரித்தது.
தொடரும் பேரிடருக்கு மத்தியில் “கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும்” இலங்கைக்கு உதவ இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக (fully committed) வலியுறுத்தியுள்ளது.




