வாகன இறக்குமதி தொடர்பான அவசர முடிவு
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானம் எடுக்கும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்காணிப்புக் குழு நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடிய போது குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்த வருமான இலக்கை எட்ட முடியாது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை சுங்கத்தின் வருமானமாக 1,226 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருடத்தின் முதல் 05 மாதங்களில் 330 பில்லியன் ரூபாவே பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்டுவது சிரமமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி உள்ளிட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது என சுங்க அதிகாரிகள் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் இவ்வருடம் பெறக்கூடிய வருமானம் சுமார் 783 பில்லியன் ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீதமான வருமானம் கிடைத்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் வாகன இறக்குமதிக்கான வரியாக 150 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும் என சுங்க அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன் காரணமாக கடன் உதவி முறையின் கீழ் வேறு நாடு தொடர்பில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும், நாட்டின் வெளிநாட்டு நாணயத்தை நாட்டை விட்டு வெளியேறாமல் சுங்க வருவாயை அதிகரிப்பதே சிறந்த வழி எனவும் சுங்க அதிகாரிகள் கலந்துரையாடலில் வலியுறுத்தியுள்ளனர்.