வடமாநில தொழிலாளர்களை சந்தித்த ஸ்டாலின் : அச்சுறுத்தல் குறித்து கலந்துரையாடல்!
தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபகாலமாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இதனால் திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இன்று நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடி சென்ற போது காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு 147 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
அவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர்களிடம் உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் உள்ளதா? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வழக்கம்போல் தாங்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர்.