யாழில் ஆசிர்வாத வழிபாடுகளை நடத்திய பிரபல பாதிரியார் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணப் பகுதியில் “ஆசிர்வாத வழிபாடுகளை” நடத்தத் தயாரான பாதிரியார் மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக யாழ்.பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பால் தினகரன் என்ற இந்த பாதிரியார் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 15 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ளார்.
பின்னர் நேற்று (23ம் திகதி) இரத்மலானையிலிருந்து பலாலிக்கு உள்ளக விமானம் மூலம் சென்றதுடன், “மானிப்பாய்” பகுதியில் இரண்டு ஆசீர்வாத சேவைகளை நடாத்தினார்கள்.
இன்றும் நாளையும் (25) ஆசீர்வாத ஆராதனைகள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வியாபார விசாவில் வந்து ஆசீர்வாத சேவைகளை பிரதேசம் பூராகவும் நடாத்துவதற்கான மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி நேன்று (24) பிற்பகல் 01.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-127 இல் இந்த பாதிரியார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.