மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு நிவாரணம்: உயிர்காக்கும் மருந்துக்கு அவுஸ்திரேலிய அரசு மானியம்
மார்பகப் புற்றுநோய் மூளைக்குப் பரவுவதைத் தடுக்கும் ‘டுகாடினிப்’ (Tucatinib) என்ற அத்தியாவசிய மருந்தை, மருந்து நன்மைகள் திட்டத்தின்கீழ் (PBS) கொண்டு வர அவுஸ்திரேலிய மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
HER2-positive ரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையவுள்ளது. தற்போது இச்சிகிச்சைக்காக ஒரு நோயாளி மாதம் ஒன்றுக்கு சுமார் 4,500 டாலர்கள் வரை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
புதிய திட்டத்தின்படி, இந்த மருந்து PBS பட்டியலில் சேர்க்கப்பட்டால், நோயாளிகள் மாதம் 31 முதல் 35 டாலர்கள் மட்டுமே செலுத்தினால் போதுமானது.
இது புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிதி நிவாரணத்தைத் தரும் என மார்பகப் புற்றுநோய் வலையமைப்பு (BCNA) தெரிவித்துள்ளது.
மருந்து நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் வாரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் குறைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





