பிரான்சுக்கு பயணம் செய்யவுள்ள பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி
பிரான்சில் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை எதிர்த்து பல்வேறு துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருவதால், பிரான்ஸ் ஸ்தம்பித்துப்போயுள்ளதுடன், நாட்டில் ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. இந்நிலையில், Ryanair மற்றும் easyJet ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் பிரித்தானியர்களுக்கு ஒரு பயண எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளன.
பிரான்சில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் பங்கேற்க இருப்பதால், விமானங்கள் பெருமளவில் தாமதமாகலாம் என்றும், ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது என்றும் அவை எச்சரித்துள்ளன.
பிரான்சுக்கு வரும், பிரான்சிலிருந்து புறப்படும் மற்றும் பிரான்ஸ் வான்வெளியைப் பயன்படுத்தும் விமான சேவைகள் கூட பாதிக்கப்படலாம் என அவை தெரிவித்துள்ளன .அத்துடன், பிரான்சிலிருந்து புறப்படுவோர் விமான நிலையம் வந்து சேருவதற்கான பொதுப்போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என்பதால், மக்கள் வெகு நேரம் முன்பே விமான நிலையத்துக்குப் புறப்படுமாறும், புறப்படும் முன்பே தங்கள் விமானத்தின் நிலை குறித்து இணையத்தில் சோதித்துவிட்டு புறப்படுமாறும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.